வாழ்க சமுதாயம்...
வளர்க சேனைத்தலைவர் குலம்...

மாநில சங்க நிர்வாகிகள் உரை

சமுதாயப் பணியில் உங்கள் தொண்டனாக...

வாழுகின்ற வார்த்தைகள்- வீழுகின்ற வார்த்தைகள்

மருத்துவர் ஒரு பெண்மணிக்கு சில மருந்துகளை பரிந்துரைத்துவிட்டு நீங்கள் இந்த மருந்துகளை தொடர்ந்து சாப்பிட வேண்டும் என்கிறார். எவ்வளவு காலம் டாக்டர், நான் சாகும்வரை இதெல்லாம் சாப்பிடணுமா என்று கேட்கிறார் அந்த பெண்மணி. டாக்டர் கூறுகிறார், நீங்கள் வாழும்வரை என்று. சாகும்வரை- வாழும்வரை என்ற இரு வார்த்தை ஒரே பொருளைத் தான் குறிக்கின்றன. ஆனால் சாகும்வரை என்பதில் அதிருப்தி, அச்சம் தரும் ஓர் எதிர்மறை எண்ணம் எழுகிறது. ஆனால் வாழும்வரை என்ற சொல்லில் ஆறுதல் தரும் நேர்மறை எண்ணம் மற்றும் சிந்தனையில் உத்வேகம் ஏற்படுகிறது.

சொற்களில் என்ன இருக்கிறது, அது புரிந்து கொள்வதில்தானே இருக்கிறது என்று வாதாடலாம் ஆனால் சில வார்த்தைகள் ரணப்படுத்தும்... சில வார்த்தைகள் குணப்படுத்தும்... அடுத்தவரை ஊக்குவிக்கும் வார்தைகளாக பேசலாம். அடுத்தவரை சோர்ந்துபோகச் செய்யும் வார்த்தைகளை தவிர்க்கலாம், ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு சக்தி இருக்கிறது. எனவே வார்த்தைகளை கவனமாக பயன்படுத்துவோம். உடலுக்கு இன்சுலின் எவ்வளவு முக்கியமோ, அதுபோல மனதுக்கு இன்சொல்லும் அவ்வளவு முக்கியம் என்ற இந்த நல்வார்த்தையுடன் என் இனிய சேனைத்தலைவர் குலச்சொந்தங்கள் அனைவருக்கும் அன்பு வணக்கத்தை தெரிவித்து உரையை தொடங்குகிறேன்.

15-01-2018 விருதுநகர் மாவட்டம் தளவாய்புரம் சேனைத்தலைவர் வாலிபர்சங்கத்தின் 25 ஆம் ஆண்டு வெள்ளிவிழா மற்றும் பொங்கல் விளையாட்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் விருதுநகர் மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு சிறப்பித்தோம். இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக நம் சமுதாய பெண்கள் பெரும் திரளாக கலந்துகொண்டனர், இப்பெண்களின் ஆர்வமும் பங்கேற்பும் பாராட்டுதலுக்குரியது

19-01-2018 சிவகிரி சேனைத்தலைவர் சமுதாய மேல்நிலைப்பள்ளியின் புதிய கட்டிட திறப்புவிழா மற்றும் 47 வது விளையாட்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தேன். ஒவ்வொரு பள்ளி திறப்பின்போதும் நமது சமுதாயக் கல்வி கண் விரிவடைவதை பெருமையுடன் உணர்கிறேன்.

25-01-2018 குற்றாலம் இலஞ்சியில் நமது சமுதாய பள்ளியின் புதிய கட்டிடத் திறப்பு விழா மற்றும் கொடி ஏற்று விழாவில் திருக்குற்றால மடத்தின் தலைவர் திரு. சம்சு அவர்களுடன் கலந்துகொண்டு சிறப்பித்தோம்.

26-01-2018 பாளையங்கோட்டை புறநகர் சேனைத்தலைவர் சங்கத்தின் குடும்ப விழா மற்றும் குடியரசு தினவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு சிறப்பித்தோம்.

28-01-2018 சென்னை மாவட்ட இளைஞர் சங்கத்தின் 6 ஆம் ஆண்டு குடும்ப விழா சேனைத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது. இதில் குடும்பம் குடும்பமாக விளையாட்டு, கலைநிகழ்ச்சி அனைத்திலும் கலந்து மகிழ்ந்தனர். இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்துகொண்டு சிறப்பித்தோம்.

“தன்னைத் தானே கவனித்தலே வாழும் கலை”

காசி அரசனின் ரதம் இமயமலையை நோக்கி வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. வாழ்க்கைமேல் மிகவும் வெறுப்புக் கொண்டிருந்த அம்மன்னன் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் இருந்தான். எல்லாம் இருந்தும் மன நிம்மதி இல்லை. குழப்பமான சிந்தனைகளுடன் பயணத்தைத் தொடர்ந்தபோது, ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்த மனிதரைப் பார்த்தான். எளிமையான உடைகளுடன் இருந்த அந்த மனிதரின் முகத்தில் பேரானந்தம் தாண்டவமாடுவதை ஆச்சரியத்துடன் நோக்கினான். தனது மரணத்திற்கு முன்பு இந்த மனிதரிடம் ஆசுவாசமாகப்பேசிக்கொண்டிருக்கலாமே என்று நினைத்து ரதத்தை நிறுத்தி இறங்கினான். தனது மூடிய விழிகளைத் திறந்தார். அந்த மாமனிதர், தன்முன் நின்ற மன்னனைப் பார்த்து என்ன வேண்டும் என்று கேட்டார். “ நான் ஒரு அரசன், எல்லாம் இருந்தும், ஏதும் இல்லாத எண்ணமே என்னை வதைத்துக் கொண்டிருக்கிறது. என் பிரச்சினையை என்னால் தெரிந்து கொள்ள முடியவில்லை. உங்கள் ஒளியுடைய முகம் என்னை ஈர்த்தது. நான் சாவதற்கு முடிவு எடுத்துள்ளேன். என் பிரச்சினை என்னவென்று அதற்கு முன்னர் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்” என்றான் மன்னன்.

மன்னன் சொல்வதை எல்லாம் அமைதியாகக் கேட்டுக்கொடிருந்தாலும், அந்த மனிதரின் பார்வை மன்னனின் காலகளையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தது. மன்னனுக்குச் சிறு வயது முதலே காலாட்டுகிற பழக்கம் உண்டு. அந்த மனிதர் தன் கால்களைப் பார்க்கிறார் என்பதை அறிந்த மன்னன் சட்டென்று காலாட்டுவதை நிறுத்தி விட்டான். “ மன்னனே உனக்கு எவ்வளவு காலமாக காலாட்டுகிற பழக்கம் உள்ளது?” என்று கேட்டார். தனக்கு நினைவு தெரிந்த நாள்முதல் காலாட்டுவதாக மன்னன் பதில் கூறினான். “ இப்போது நீ ஏன் காலாட்டுவதை நிறுத்தி விட்டாய்?” என்று கேட்டார் அந்த மனிதர், “ நீங்கள் என் கால்களையே கவனித்தீர்கள்” என்று பதிலளித்தான் மன்னன். “ நான் உன் கால்களையே கவனித்ததால் உன் நீண்ட நாள் பழக்கத்தை நிறுத்தி விட்டேன் என்கிறாய். “ இனிமேல் நீயே உன்னை கவனி” “ எதையெல்லாம் நிறுத்த வேண்டும் என்பது உனக்கே தெரியவரும் என்றார்” மன்னனின் இருண்ட மனதில் ஓர்ஒ ளிக் கீற்று தெரியத் தொடங்கியது. மிகுந்த பணிவோடு, “ நீங்கள் யார்?” என்று கேட்டான் மன்னன். “புத்தர்” என்று பதில் வந்தது. மன்னன் அவர் காலில் விழுந்து வணங்கினான். தன்னைத்தானே கவனித்தலே வாழும் கலை என்பதை அறிந்த மன்னனின் தேர், இப்போது அரண்மனை நோக்கி ஓடத் தொடங்கியது.

வாழ்க வளமுடன்! நன்றி வணக்கம்! சமுதாயப் பணியில் உங்கள் தொண்டனாக...

சேனைத் தலைவர் K.R. கிருஷ்ணமூர்த்தி, (மாநிலத் தலைவர்)
கைப்பேசி: 9443167453

சங்க வளர்ச்சி நடவடிக்கைகள்

அன்புடையீர் வணக்கம்!

நம் சமுதாய சொந்தங்களே அனைவருக்கும் என் அன்பான வணக்கம். பொங்கல் விழா மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்ந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

ஜனவரி மாதம் 7 ஆம் தேதி சென்னையில் நிர்வாகக்குழு, அறங்காவலர் குழு, கட்டிட கமிட்டி கூட்டங்கள் நடைபெற்றது. அறங்காவலர் குழுக் கூட்டத்தில் 2017 ஏப்ரல் முதல் 31-12-2017 டிசம்பர் மாதம் முடிய செயலாளரின் சங்க நடவடிக்கை அறிக்கை வாசிக்கப்பட்டது. வரவு- செலவு கணக்கு வாசிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. சேனையர் முரசு விலை ரூ.2 லிருந்து ரூ.5 ஆக உயர்த்த அனுமதி வாங்கப்பட்டது. அதுதவிர கண் பார்வையற்ற இரண்டு மாணவர்களுக்கு கல்விக்கான உதவி தொகை வழங்க அனுமதி பெறப்பட்டது.

கல்வி ஊக்கத்தொகைக்கு விண்ணப்பம் செய்ய செப்டம்பர் கடைசி தேதியாக அறிவித்திருந்தாலும் டிசம்பர் 25 ஆம் தேதி வரை பெறப்பட்ட விண்ணப்பங்களில் தகுதி வாய்ந்த 800 நபர்களுக்கு ரூ. 19,40,000 கல்வி ஊக்கத்தொகை வழங்க முடிவு எடுக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து 465 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. 7 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் திருநெல்வெலி மாவட்டம் நீங்காக அனைத்து மாவட்டங்களுக்கும் கல்வி ஊக்கத்தொகைக்கான காசோலை வழங்கப்பட்டது.

2016-2017 ஆம் ஆண்டில் 840 விண்ணப்பங்களுக்கு ரூ. 22,37,000 வழங்கப்பட்டது.

7 ஆம் தேதி நடைபெற்ற நிர்வாகக்குழுக் கூட்டத்தில் குற்றால இடம் சேனையர் மாளிகை கட்டிட விஷயமாக பேசப்பட்டது. கட்டிட வேலைக்கு தேவைப்படும் தொகையை மாவட்டம்தோறும் சென்று, நன்கொடையாகவோ, வட்டியில்லா கடனாக அல்லது 1/2 வட்டிக்கு கடனாக பெற்று கட்டிட வேலையை பூர்த்தி செய்து

ஏப்ரல் மாதத்திற்குள் திறப்பு விழா செய்ய முடிவு எடுக்கப்பட்டது. எனவே மாநில சங்க நிர்வாகிகள் தங்கள் மாவட்ட நிர்வாகிகளுடன் தங்களை நாடி வரும்பொழுது கட்டிட நிதி தந்து பெருந்தன்மையுடன் ஒத்துழைக்க கேட்டுக்கொள்கிறேன்.

ஜனவரி 14,15 ஆம் தேதிகளில் விருதுநகர் மாவட்டம் தளவாய்புரம் வாலிபர் சங்க வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்றது. 15 ஆம் தேதி விழாவில் தலைவர் கலந்துகொண்டு சிறப்பு செய்தார்.

18 ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்ட சங்க செயலாளர் திரு. M.K.S மாதன் அவர்களின் குமாரர் M. புஷ்பக், B.E., M.B.A, செல்வி. சு. ராஜ் ஸ்ரீ, B.E திருமண வரவேற்பு விழாவில் கலந்துகொண்டு வாழ்த்தினோம்.

19 ஆம் தேதி சிவகாசி நகர சேனைத்தலைவர் சங்க தலைவர் திரு.M. பாலசுப்பிரமணி அவர்களின் குமாரர் B. தீபக் அவர்களின் திருமண விழாவில் கலந்துகொண்டோம். 19ஆம் தேதி மாலை 10.30 மணி அளவில் சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளியின் புதிய கட்டிடம், கூடுதல் வகுப்பறை திறப்பு விழாவில் கலந்துகொண்டு வாழ்த்தி வந்தோம். விழா ஏற்பாடுகளை தலைவர் திரு.A. அருணாசலம் மற்றும் பள்ளி செயலாளர் Dr.S.S. செண்பகவிநாயகம் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தார்கள்.

26 ஆம் தேதி சென்னையை சார்ந்த ஈராச்சி திரு. S. முருகன் அவர்களின் மகள் செல்வி. M.ரேகா, B.sc., M.C.A.,-M. முத்து பாலாஜி B.E., ஆகியோரின் திருமண விழாவில் கலந்துகொண்டோம்.

26 ஆம் தேதி நெல்லை பாளையங்கோட்டை புறநகர் சேனைத்தலைவர் சங்கத்தின் 22 வது ஆண்டு விழா மற்றும் குடும்பவிழா சிறப்பாக நடைபெற்றது. அதில் நிர்வாகிகள் கலந்துகொண்டோம்.

27 ஆம் தேதி குற்றால கட்டிட வேலைகளை பார்வையிட்டோம். 28 ஆம் தேதி சென்னை மாவட்ட இளைஞர் சங்கத்தின் 6வது ஆண்டு குடும்ப விழாவில் கலந்துகொண்டோம். விழாவில் இரத்ததானம் முகாம் நடைபெற்றது. 50 நபர்கள் இரத்ததானம் வழங்கினார்கள். உதவித்திட்டங்கள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இளைஞர் சங்கத் தலைவர் ராஜ்குமார் தலைமையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

சேனையர் முரசு சந்தா மற்றும் குடும்ப விபரப் படிவங்கள் மாவட்ட சங்கங்களிலிருந்து முழுமையாக வந்து சேரவில்லை சுமார் 25000 முரசு புத்தகங்கள்தான் அச்சிடப்பட்டு அனுப்பிவைக்கப்படுகிறது. இது விஷயத்தில் மாவட்ட தலைவர்கள் முழு கவன, செலுத்த கேட்டுக்கொள்கிறோம்.

மீண்டும் சந்திப்போம்! அன்புடன்
சேனைத் தலைவர் V. தியாகராஜன்
(பொதுச் செயலாளர்)
கைப்பேசி: 9994024983

மாநில சங்க பொருளாளர் உரை:

ஒன்று படுவோம்! உயர்வடைவோம்!

சேனைத்தலைவர் குல சான்றோர்களே, வணக்கம். நமது சங்கத்தின் மாநில நிர்வாகிகள் தேர்தல் 21.12.2014 அன்று நமது சங்க கட்டிடத்தில். நமது சேனைத்தலைவர் மாளிகையில் ஜனநாயக முறையில் சங்க விதிகளுக்கு உட்பட்டு மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றது. அத்தேர்தலில் மாநில பொருளாளர் பதவிக்கு முதன்முறையாக பட்டுக்கோட்டையிலிருந்து K.T.P.S. சுதாகர் என்ற என்னை தேர்ந்தெடுத்த மாநில பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் ஆதரவு அளித்த மாவட்ட சங்கங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தொரிவித்துக்கொள்கிறேன், மாநில தலைவர் திரு.K.R.கிருஷ்ணமூர்த்தி, மாநில பொதுச்செயலாளர் திரு.V.தியாகராஜன் அவர்களுடன் இணைந்து நேர்மையான, வெளிப்படையான சங்க விதிகளுக்கு உட்பட்டு செயல்படுவேன் என்று உறுதி அளிக்கிறேன். சமுதாய நலத் திட்டங்கள் எவ்வித விருப்பு. வெறுப்பின்றி அனைவருக்கும் வழங்க செயல்படுவேன். மேலும் எனது பணியான மாநில பொருளாளர் பொறுப்புகளை முறையாக செய்து, சங்கம் வளர பாடுபடுவேன். அனைவாரின் ஒத்துழைப்பையும் நாடுகிறேன் .

அன்புள்ள,
K.T.P.S. சுதாகர்
பொருளாளர்,
தமிழ்நாடு சேனைத்தலைவர் மகாஜன சங்கம்.